articles

img

துணைக்கோள்களை விழுங்கும் விண்மீன்கள் - இரமணன்

     பூமியிலிருந்து 10000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம் துணைக்கோள்(planet) ஒன்றை விழுங்கும் காட்சி முதன்முதலாக காணப்பட் டுள்ளது. இரண்டு தொலைநோக்கிகள் சிறிது நேரம் நீடித்த ஒளி வெடிப்பை படம் பிடித்தன. ஜுபிடரைப் போல 10 மடங்கு பெரிதான துணைக்கோளை ஒரு நட்சத்திரம் விழுங்கு வதனால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    துணைக்கோள்கள் உள்வாங்கப்படும் நிகழ்வு நடை பெறும் என்று  நீண்ட காலமாக கணிக்கப்பட்டிருந்தாலும் அதைக்  காண்பது மெய்யாக்கப்பட்டிருப்பது கிளர்ச்சியை ஊட்டுகிறது என்கிறார் எம்ஐடியை சேர்ந்த விண்வெளி இயற்பியலாளர் கிஷாலே டே. வானில் திடீரென தோன்றும் பிரகாசமான ஒளி நிகழ்வுகளை அவர் ஆய்வு செய்து கொண்டி ருந்தார். இந்த நிகழ்வானது ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்தின் பொருண்மைகளை இழுக்கும் அளவுக்கு  ஒன்றையொன்று நெருங்கி வரும் அறிகுறியாக இருக்கலாம்.  

    2020இல் ஒரு நிகழ்வு தனித்து தெரிந்தது. ஒரு ஒளிப்பகுதி மிக விரைவாக 100 மடங்கு பிரகாசமானது. இது இரண்டு விண்மீன்கள் ஒன்றிணைவதாக இருந்திருக்கலாம். ஆனால் நாசாவின் அகச்சிவப்பு விண்தொலை நோக்கி மூலம் மீண்டும் பார்த்தபோது வேறுவிதமான  நிகழ்வாக தோன்றியது. அதிலிருந்து பெறப்பட்ட தரவுகள் இந்த ஒளிவெடிப்பிலிருந்து வெளிவந்த ஆற்றல் இரண்டு விண்மீன்கள் இணையும் போது வெளிப்படுவதில் 1/1000 பங்கே எனக் காட்டியது.  

   மேலும் நட்சத்திரங்கள் இணையும்போது வெளிப்படும் சூடான பிளாஸ்மாவிற்குப் பதிலாக இதில் குளிர்ந்த தூசே சூழ்ந்திருந்தது. ஆகவே இது ஏதோ ஒரு வகையான இணைவு என்று வைத்துக்கொண்டாலும் குறைவான ஆற்றல் வெளிப்பாடு இரண்டில் ஒன்று பெரும் துணைக்கோளே தவிர நட்சத்திரம் இல்லை எனக் காட்டுவதாக டே குழுவினர் கூறுகிறார்கள்.  

   தங்கள் வாழ்நாளின் இளமைப் பருவத்தில் இருக்கும் விண்மீன்கள், தங்கள் சுற்றுவட்டத்திற்கு மிக அருகில் வரும் துணைக்கோள்களை விழுங்கலாம் அல்லது இறக்கும் தருவாயில் இருக்கும் விண்மீன் ரெட் ஜயண்டாக மாறும் தருவாயில் மிகப் பெரிதாகி துணைக்கோளை விழுங்கலாம். இந்த ஆய்வில் காணப்பட்ட நட்சத்திரம் ரெட் ஜயண்டாக மாறும் தொடக்க கட்டத்தில் உள்ளது.

    இந்த ஆய்வாளர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட தொலை நோக்கிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை ஒன்றிணைத்து இந்த நட்சத்திரம்  துணைக்கோளை விழுங்குவதற்காக வெளிப்புறமாக பெரிதாவதை உறுதிப்படுத்தியுள்ளனர். நட்சத்திரங்கள் துணைக்கோள்களை உட்கொள்வது குறித்து பல விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன. ஆனாலும் பெரும் அகச்சிவப்பு காமிராக்களைக் கொண்ட கண்காணிப்பு நிலையங்கள், துணைக்கோள்களை விழுங்கும் மேலும் பல நட்சத்திரங்களை காட்டும்  பிரகாசமான நீண்ட நேரம் நிலைக்கும் உமிழ்வுகளை விண்வெளியிய லாளர்கள் பார்ப்பதற்கு உதவும்.